Latest | சமீபத்தியது 

ஒருவருக்கு இருவகையான கொவிட் – 19 தடுப்பூசிகளை செலுத்த முடியாது!

ஒருவருக்கு இரண்டு வகையான கொவிட் – 19 தடுப்பூசியை செலுத்த முடியும் என்பதை உலக சுகாதார நிறுவனம் இன்னும் விஞ்ஞானப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை -என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நேற்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது,

” முதல் கட்டமாக ஒரு வகையான கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டால் இரண்டாம் கட்டமாக மற்றுமொரு வகை தடுப்பூசியையும் ஏற்றலாம் என துறைசார் நிபுணர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை வைத்தியர்கள் இறுதி முடிவெடுப்பார்கள். எனவே, முதல் சுற்றில் தடுப்பூசியை பெற்றவர்கள், இரண்டாம் சுற்றில் தடுப்பூசியை பெறுவது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் வினவியபோதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

” கலப்பு முறையில் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றலாம் என்பதை உலக சுகாதார நிறுவனம் இன்னும் விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அவ்வாறு உறுதிப்படுத்தினால் அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த முடியும்.

முதல் சுற்றின்போது பெறப்பட்ட தடுப்பூசி வகையையே இரண்டாம் சுற்றிலும் பெறவேண்டும் என தடுப்பூசி தொடர்பான இலங்கையில் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இம்முடிவு மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது.” – என்றார்.

Related posts

Leave a Comment