Latest | சமீபத்தியது 

வறட்சி, நாக்கு அரிப்பு…? கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை

வறட்சி நிலை மற்றும் நாக்கு அரிப்பு போன்றவை கொரோனா பாதிப்பின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சீனாவில் உகான் நகரில் முதன்முதலில் அறியப்பட்ட கொரோனா பாதிப்பு பின்னர் உலக நாடுகளுக்கு பரவி இன்றளவும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய தொற்றானது தொடர்ந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மத்தியில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோன்று, பிரேசில் மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரசானது பரவியது தெரிய வந்தது.

கொரோனா பாதிப்புகளாக காய்ச்சல், உடல் வெப்பநிலை அதிகரித்தல், மூச்சு திணறல் உள்ளிட்டவை இதுவரை அறியப்பட்டு வந்தன. இந்த நிலையில், கோவிட் டங் (நாக்கு) என்ற புதிய அறிகுறியை பெங்களூருவில் உள்ள டாக்டர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இதுபற்றி கோவிட் பணி குழுவில் ஈடுபட்டு உள்ள டாக்டர் ஜி.பி. சத்தூர் கூறும்பொழுது, 55 வயது நிறைந்த நபர் ஒருவர் தனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என சிகிச்சை பெற என்னை அணுகினார்.

அவர், வாயில் அதிக வறட்சி பாதிப்பு உள்ளது என கூறினார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்தேன். சீராகவே இருந்தது. ஆனால், ரத்தத்தில் உள்ள எரித்ரோசைட் படிவு விகிதம் அதிக அளவில் இருந்தது.

அவருக்கு காய்ச்சல் இல்லாத நிலையிலும், களைப்பு ஏற்படுகிறது என கூறினார். அதனால் சந்தேகமடைந்த நான், அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். அதனால் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டு வாருங்கள் என அவரிடம் கூறினேன்.

அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்துள்ளார் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இந்த புதிய அறிகுறி பின்னணிக்கான காரணம் பற்றி டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இங்கிலாந்து, பிரேசில் அல்லது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாறிய கொரோனா போன்ற புதிய வகை வைரசுகளால் ஏற்பட்டிருக்கலாம் என சத்தூர் கூறியுள்ளார்.

அதனால் நாக்கு பாதிப்பு என வருபவர்களை அலட்சியம் செய்யாமல் அவர்களையும் டாக்டர்கள் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு, இந்த வகை கொரோனா வைரசுகளை பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக மரபணு தொடர் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment